ஆம் ஆத்மியும் தமிழ் ஆத்மியும்

ஆம் ஆத்மியும் தமிழ் ஆத்மியும்
Published on

தலைநகர் தில்லியை ஆம் ஆத்மியின் விளக்குமாறு ஓர் பேரலையாக கூட்டிச் செல்லும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூட நினைத்திருக்கவில்லை. இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான வாக்குகளையும்( 51%) இவ்வளவு அதிகமான இடங்களையும் யாரும் வென்றதில்லை என்கிற அளவுக்கு மகத்தான வெற்றி.

ஊருக்கே நொட்டை சொல்லும் தில்லி பத்திரிகையாளர்கள் அவர்கள் வீட்டுப் புழக்கடையில் நடந்த புரட்சியை அறிந்திருக்கவில்லை.

கடந்த ஆண்டு 49 நாட்கள் ஆட்சி நடத்திவிட்டு விலகிய அர்விந்த் கெஜ்ரிவாலை ஊடகங்கள் பெரும்பாலும் கைவிட்டன. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் மக்கள் இன்னொரு வாய்ப்பைத் தர நினைத்திருந்தார்கள் என்றே காண்பிக்கின்றன. இந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் புதுதில்லிக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடந்த நிகழ்வுகளில் பாஜகவும் ஆம் ஆத்மியும் புயல்வேகத்தில் மோதின.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே பாஜக செய்தது ஆம் ஆத்மியில் போன தேர்தலில் முக்கியமான நபராகவும் அங்கே ஆர்.கே.புரத்தில் எம்.எல்.ஏவாகப் போட்டியிட்டுத் தோற்றவருமான ஷாசியா இல்மியைத் தன் பக்கம் இழுத்தது. அப்புறம் காங்கிரசைச் சேர்ந்த முக்கியமான தில்லி புள்ளியான கிருஷ்ணா தீரத் அம்மையாரையும் சேர்த்துக்கொண்டது. இதையடுத்து பாஜக செய்த முக்கியான வேலை அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் முன்னின்ற கிரண்பேடியை கட்சியில் சேர்த்தது.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் எதிர்ப்புத் தெரிவித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதற்கு மறுப்புத் தெரிவித்தது. கட்சிக்குள் பேடியை சேர்த்ததற்கே எதிர்ப்பு என்றால் அவரை முதல்வர் வேட்பாளராக இரு நாள் கழித்து அறிவித்ததற்கு? வெளிப்படையாகவே மோடி-- அமித் ஷாவின் இந்த திட்டத்துக்கு தில்லி பாஜகவில் எதிர்ப்பு. தில்லி பாஜக தலைவர் ஹர்ஷவர்த்தனை ஓரங்கட்டியதை கட்சிக்காரர்கள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் கிரண் பேடிக்கு பதில் ஷாசியா இல்மியை முதல்வராக அறிவித்திருக்கலாம்.  இவர் அவரைவிட அழகானவர் என்று கருத்து தெரிவித்து எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. அதைவிட ஆம் ஆத்மிக் கார ரான வழக்கறிஞர் சாந்திபூஷன், பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஒரு மிகச் சிறந்த நடவடிக்கை என்று சொந்தக் கட்சி காலையே வாரினார்.

ஒரே உறையில் இருவாள்களாக கிரண் பேடியையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் மோதவிட்டு பாஜக வேடிக்கை பார்த்தது. அந்த கட்சித் தலைமை இதை பெரிய ராஜதந்திரமாக நினைத்திருக்கலாம்.

ஆனால் பிரச்சாரத்தின் போக்கு அப்படி இல்லை. நேருக்கு நேர் விவாதத்துக்கு வருமாறு பேடியை அழைத்தார் கெஜ்ரிவால். சட்டசபையில் பதில் சொல்கிறேன் என்று மறுத்தார் பேடி. மோடிக்கு எதிராக முன்னொரு காலத்தில் பேடி விடுத்த ட்வீட்களையெல்லாம் தேடி எடுத்துப்போட்டு அவரது பிம்பத்தை காலி செய்தார்கள் ஆம் ஆத்மியினர்.

பாஜக வினர் கெஜ்ரிவால் மீது தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்தனர். ‘முதல்வராகும்போது சாண்ட்ரோ கார் வைத்திருந்தவர், 49 நாட்களில் இன்னோவா காருக்கு மாறிவிட்டார். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தால் வீட்டு வாசலில் விமானத்தையே நிறுத்தி வைத்திருப்பார்’ என்று பொளந்தார் அமித் ஷா. டெல்லியில் அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பார்த்து சலித்துப்போனவர்கள் வாக்காளர்கள். அவர்களிடம் இது எடுபட்டதாகத்தெரியவில்லை. இதற்கிடையில் குடியரசு தினம். ஒபாமா வந்தார். பிரதமர் மோடி பத்துலட்ச ரூபாய் ஆடை அணிந்து பெரும் ‘கவனத்தைப்’ பெற்றார். பாஜகவின்  மோடியுடன் செல்பி எடுக்கும் ஹை டெக் பிரச்சாரம் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை திரும்பக் கொண்டுவர முயன்றது. தினமும் ஐந்து கேள்விகளை கெஜ்ரிவாலுக்கு எழுப்புவதை பாஜக செய்ய ஆரம்பித்தது. ஆனாலும் கெஜ்ரிவால் பக்கமே வாக்காளர்கள் சாய்வதைத் தடுத்து நிறுத்த இயலாத நிலையில் பாஜக வெளிமாநிலங்களில் இருந்து 120 எம்பிகள், ஏராளமான தொண்டர்களை பிரச்சாரத்துக்கு இறக்கியது.  மோடி பிரச்சார களத்தில் குதித்து கெஜ்ரிவாலை வாரினார். ‘உலகம் நம்மை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதை தில்லிதான் தீர்மானிக்கும்’ என்றார். தர்ணா கட்சி, ட்ராமா கட்சி என்று கெஜ்ரிவாலை எல்லா கூட்டங்களிலும் பாஜகவினர் விமர்சித்தனர். ஜனவரி மாத இறுதியில் நாங்கள் குறைந்தது 45 இடங்களில் வெல்வோம் என்று அறிவித்தார் கெஜ்ரிவால். வாக்களிக்கும் நாள் நெருங்கையில் ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு ஆதரவாய் ஒரு குழு உடைந்து ‘அவாம்’ என்ற பெயரில் உருவானது. நிழலான ஆட்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் ஆம் ஆத்மி பெற்றதாக குற்றம் சாட்டியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆம் ஆத்மியினர் கருப்புப் பணத்தை இறக்குவதாகக் குற்றம்சாட்டினார். ‘துணிச்சல் இருந்தால் கைது செய்!’ என்று சீறினார் அர்விந்த் கெஜ்ரிவால்.

இவ்வளவு கொதிக்கும் மனநிலையில்தான் கடும்போட்டி நிலவிய தில்லி தேர்தல் முடிவுக்கு வந்தது. 70 இடங்களில் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் பாஜக வென்றது. 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. ஏம்பா.. கடந்த பதினைந்து ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் பத்தி ஒரு வார்த்தையாவது சொல்லுப்பா என்கிறவர்களுக்காக: 63 இடங்களில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்து சாதனை புரிந்தது.

இவ்வளவுதான் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற கதையின் வெளிப்புறத் தோற்றம். சற்று உள்ளே போனால் அக்கட்சி ஆட்சியைத் துறந்தபிறகு ஓய்வெடுக்கச் சென்றுவிடவில்லை. முன்பை விட அதிகமாக உழைத்தது. கெஜ்ரிவால் முதல்வர் பதவியைத்துறந்தத்தற்காக மன்னிப்புக்கேட்டார். பாஞ்ச் சால் கெஜ்ரிவால் !(ஐந்தாண்டு கெஜ்ரிவால்!) என்ற கோஷம் பிறந்தது. டெல்லி மாநிலத்தில் கவனம் செலுத்தவேண்டிய 12 விஷயங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான திட்டங்களை உருவாக்கினர். டெல்லி டயலாக் என்று அதற்குப்  பெயரும் சூட்டி மக்களிடம் எடுத்துச் சென்றனர். வேலை வாய்ப்பு, மகளிர் உரிமையும் பாதுகாப்பும், சமூக நலம்,  மின்சாரம்,  சுகாதாரம், கிராமப்புற டெல்லி,  தொழில், சுத்தமும் குப்பை மேலாண்மையும், போக்குவரத்து,  கல்வி,  நிலமும் குடியிருப்புகளும்,  தண்ணீர்- ஆகிய பிரச்னைகளை அடையாளம் கண்டு பல்வேறு இடங்களில் பேசினர். மின்சாரக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்கிறோம்; 24 மணி நேரமும் மின்சாரம் தருகிறோம், இலவசமாக குழாயில் குடிநீர் தருகிறோம்,- போன்ற வாக்குறுதிகளைத் தந்ததுடன் இதைஎல்லாம் எப்படித் தருவோம்? என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடிந்தது. (இலவசமாக தொலைக்காட்சி, மின்விசிறி, போன்றவற்றைத் தருகிறோம் என்று அவர்கள் சொல்லவேஇல்லை என்பதைக் கவனிக்கவும்)

சிறுவர்த்தகர்களுக்கு வரியைக் குறைப்போம். அவர்களுக்கு அதிகாரிகளால் தொல்லை இருக்காது என்று சொன்னது அவர்களின் ஆதரவை ஆம் ஆத்மிக்கு அப்படியே பெற்றுக்கொடுத்தது.

ஊழலுக்கு எதிராக 2011-ல் அண்ணா ஹசாரேயுடன் ஜன லோக்பால் கேட்டு தொடங்கிய இயக்கத்தை 2012 நவம்பரில் ஆம் ஆத்மி கட்சியாக கெஜ்ரிவால் உருவாக்கினார். 2013-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்  இரண்டாவது பெரிய கட்சியாக 28 இடங்களை வென்றது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஜன லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலையில் 49 நாட்களில் ஆட்சியை விட்டொழித்தது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த கால கட்டத்தில் பார்த்தால் அர்விந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தின்போது நேரடியாகவே பொதுமக்களால் தாக்கப்பட்டார். ஒரு ஆட்டோக்காரர் அவரை அறைந்தார். இன்னொரு 20 வயது பையன் அவரை குத்தி னான். இதெல்லாம் பிரச்சாரத்தின் போது நடந்தவை. 24 மணி நேர தொலைக்காட்சி உலகில் பொதுமக்கள் முன்னிலையில் அடிவாங்கிய முதல் தலைவர் அவர்தான். ஆனால் அதையெல்லாம் காந்திய வழியில் தனக்கான பிரச்சாரங்களாக மாற்றிக்கொண்டார். அடித்த ஆட்டோக்காரரை வீட்டுக்கே போய்ப் பார்த்தார்! அத்துடன் அடித்தட்டு மக்களின் பிரச்னைக்காக நடுரோட்டில் இறங்கி மறியல் செய்யவும் அடிவாங்கி சிறைக்குப் போகவும் தயாராக இருந்ததால்தான் மக்கள் ஆதரவைப் பெற முடிந்தது.

எளிமையான தலைவராக அவர் தன்னை முன்னிறுத்தினார். டெல்லியில் குளிருக்காக தலையைச் சுற்றி மப்ளர் சுற்றிக்கொண்டு சாதாரண நபரான தோற்றத்துடன் இருந்ததால் அவரை மப்ளர் மனிதர் என்றனர். ஆம் ஆத்மியும் அதையே தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டது.  மப்ளர் மேன் என்ற விளம்பரங்கள் அவரை சாதாரண மனிதராக பிம்பப்படுத்தின. ஆம் ஆத்மியின் ஒரு வீடியோ விளம்பரத்தில் பள்ளிச் சிறுவன் ஒருவன் வீட்டில் படிக்கும்போது பல சொற்களுக்கு அர்த்தம், விளக்கம் கேட்கிறான். அவனது அம்மாவும் சகோதரியும் சொல்ல அலுத்துக்கொள்கிறார்கள். அவன் தலையில் ஆம் ஆத்மி குல்லாவுடன் சொல்கிறான்: மப்ளர் மேன் வரப்போறாரு... வைஃபை கொண்டுவருவார். நான் கூகுளில் தேடிப் பாத்துக்குவேன்.

டெல்லி முழுக்க இலவச வைஃபை, என்பது ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி. கல்வியையும் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடர்பு படுத்திய விளம்பரம் இது.

ஆம் ஆத்மியின் வெற்றி என்பது ஜனநாயகத்தில் ஒரு பரிசோதனை முயற்சி. புதிதாக உருவாகும் கட்சிகள் எல்லா சித்தாந்தங்களையும் கலந்துபோட்டு ஒரு கொள்கையை உருவாக்கி காலப்போக்கில் கரைந்துபோவது வழக்கம். இல்லையெனில் ஏற்கெனவே உள்ள பெரிய கட்சியை நகல் எடுக்க முயற்சி செய்து வீணாய்ப் போய்விடுவர். தமிழ்நாட்டில் பெரும் எதிர்காலம் உள்ளவையாக கணிக்கப்பட்ட புதிய கட்சிகள் வளர்ச்சி பெறாததற்குக் காரணம் அவை ஏற்கெனவே இருந்த கட்சிகள் போலவே இருந்தன என்பதே. ஆனால் ஆம் ஆத்மிக்கு எந்த சிந்தாந்த எடையும் இல்லை. இடது, வலது பூச்சாண்டிகள் இல்லை. இன, மதவாத, மொழிவாதப் பூச்சுகள் இல்லை.  ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் களம் இதற்காக தயார் நிலையில் உள்ளதா?

அன்புமணி ராமதாஸை பாமக அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, அவரும் அர்விந்த் கெஜ்ரிவால் வெல்லும்போது நான் வெல்ல முடியாதா என்கிறார். த.மா.கா.காரர்கள் ஜிகே வாசன் தான் முதல்வர் என்கிறார்கள். விஜயகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக கூட்டணி அறிவித்தால்தான் ஆச்சு என்று மவுனமாக முரண்டு பிடிக்கிறார். தமிழ்நாட்டுக்கு கிடைக்கத் தவறிய முதல்வராக மதிமுகவினர் வைகோவைப் பார்க்கிறார்கள். வைகோவும் வடக்கே போய் அண்ணா ஹசாரேவுக்குப் பக்கத்தில் கெஜ்ரிவாலுடன் அமர்கிறார். இன்னும் சில சின்ன கட்சியினருக்கும் இயக்கத்தினருக்கும் முதல்வர் கனவு உள்ளது. கனவுகளே மீட்சிக்கு வழி வகுக்கின்றன. பெரிதினும் பெரிது கேட்கவேண்டும் அல்லவா? திமுக, அதிமுகவில் தான் அறுபது ஆண்டுகளாக முதல்வர் வேட்பாளர்கள் உருவாகிறார்கள். அவற்றிற்கு வெளியே ஏன் உருவாகவில்லை?  நியாயமான கேள்விதான். ஆனால் புதிய கட்சிகளும் இதே கட்சிகளின் ஆளுமை வழிபாடு சார்ந்த பாணியையே  கடைபிடித்துச் செல்வதை என்ன சொல்வது? மாறுபட்டு என்ன செய்துள்ளார்கள்? தில்லியில் கெஜ்ரிவால் செய்த ஆம் ஆத்மி பரிசோதனையை தமிழ்நாட்டில் அவரால் செய்ய இயலாது. ஆம் ஆத்மி தமிழ்நாட்டில் ஒரு சின்ன குழுதான். அத்துடன் டெல்லி சின்ன மாநிலம், அங்கே தெருத் தெருவாக செய்த வேலைகளை இங்கே செய்யமுடியாது.

தமிழ்நாட்டில் இருந்துதான் ஒரு தமிழ் ஆத்மிக்  கட்சி உருவாக முடியும். அல்லது இருக்கும் கட்சி அப்படி மாறமுடியும். அதற்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது. ஆட்டத்துக்கு யார் தயார்?

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com